Ads 468x60px

Thursday, February 27, 2014

விகடன் மேடை (2011) - கமல்ஹாசன்


ஆனந்த விகடனில் 2011 ஆம் ஆண்டு "விகடன் மேடை" எனும் பக்கத்தில் உலகநாயகனுக்கு வாசகர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களின் தொகுப்பு இது.



பொன்விழி, அன்னூர்
 ''பெரியாரை உங்களுக்கு அறிமுகம் செய்தவர் யார்?'' 
 
''முதலில் என் தந்தையார்... கடுமையான வாய்மொழி விமர்சனத்தின் மூலம். பின்பு, என் மூத்த சகோதரர் சாருஹாசன்... பகுத்தறிந்த பாராட்டுக்களின் மூலம்.

பெரியார் என்ன சொல்கிறார், ஏன் அப்படிப் பேசுகிறார் என்று எடுத்துச் சொல்ல யாரும் இன்றி நானாக உணர ஆரம்பித்தபோதுதான், உண்மையான முதல் அறிமுகம் அவருடன் ஏற்பட்டதாகவும் கொள்ளலாம்!''

மலைஅரசன், அருகந்தம்பூண்டி : 
 ''அக்பருக்கு பீர்பால்... கிருஷ்ண தேவராயருக்கு தெனாலிராமன். கமல்ஹாசனுக்கு..?'' 

 ''மனசாட்சி!''

இ.பு.ஞானப்பிரகாசம், சென்னை-91.
 ''அடுத்த பிறவி என்று ஒன்று இருப்பதாக (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்)வைத்துக்கொள்வோம். தாங்கள் எங்கே, எப்படி, என்னவாகப் பிறக்க விருப்பம்?'' 

''இதுவும் சும்மா ஒரு பேச்சுக்குத்தான்.
இந்த அடுத்த பிறவியை யார் மனதிலும் இல்லாத புனைகதையாக நிரூபிக்கும் நல்லறிவாளியாக, மறுபிறவி அறுக்கும் பகுத்தறிவாளனாக!''

பி.விஜயலட்சுமி, வேலூர்.
 ''நமது தேசியப் பறவை மயில், தேசிய விலங்கு புலி, தேசிய மலர் தாமரை, தேசிய குணம்..?''
 
 ''சமரசம்!''

சுகந்தி, சிவகங்கை.
 ''சமீபத்தில் பாதித்த புத்தகம்?'' 

 ''பல!
அதில் குறிப்பிடக் கடமைப்பட்டது 'The Last Lecture’ என்ற ஆங்கிலப் புத்தகமும், 'இன்றைய காந்தி’ என்ற தலைப்பில் ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளும், நண்பர் அய்யனார் தந்த தமிழாக்கப்பட்ட சாதத் ஹசன் மன்ட்டோ (Sadat Hassan Munto) கதைகளும்!''

ந.வந்தியக்குமாரன், சென்னை-41.
 '' 'உலக நாயகன்’ என்று உங்களை அழைக்கும்போது நீங்கள் அடைவது ஆனந்தமா, பரவசமா, கர்வமா, அருவருப்பா, கூச்சமா அல்லது அவமானமா?''

 ''உலகளவு புரிந்த யாருக்கும் கூச்சம்தான். ஆனால், ஒருவகையில் நாம் எல்லோருமே உலக நாயகர்கள்தான். அவரவர் உலகுக்கு அவரே நாயகர்!''


கே.அன்பு, சென்னை91.
 '' 'சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்’ என்ற அவர் மீதான விமர்சனம்பற்றி உங்கள் கருத்து?'' 

 ''ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நடித்ததால்தான் அவர் நடிகர் திலகமானார். ஒருவேளை, அந்தக் காலத்து ரசனை கொஞ்சம் ஓவரோ என்னவோ!''


மகிழை.சிவகார்த்தி, புறத்தாக்குடி.
 '' 'விருமாண்டி’ திரைப்படத்தில் தூக்குத் தண்டனை வேண்டாம் என்ற கருத்தைச் சொன் னீர்கள். உயிர்களைக் கொல்பவனுக்கு வேறு என்ன தண்டனைதான் உச்சபட்சமாகத் தர முடியும்?'' 

 ''இது நான் தானம் பெற்ற கருத்து. இதை எனதாகவும் ஏற்கிறேன். பிழையாப் பெருமை சட்டத்துக்கு இல்லாதபோது, திருத்த முடியாத தீர்ப்பை வழங்கும் அருகதை அதற்கு இல்லை. காந்தியார் வாக்கில் சொன்னால், 'கண்ணுக்குக் கண்’ என்று வெகுளும் சட்டங்கள், ஒரு நாள் உலகையே குருடாக்கும்!''

என்.ரத்னகுமார், தஞ்சாவூர்.
 ''நீங்கள் ஒரு சிறந்த நடிகர், நல்ல சமூக அக்கறையாளர், உண்மையான பகுத்தறிவுவாதி, இதில் எதிர்கால சமுதாயம் உங்களை எப்படி நினைவுகொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?'' 

 ''சமூக அக்கறைதான் என்னைப் பகுத்தறிவுவாதி ஆக்குகிறது. எதிர்காலத்துக்கு என்னைப்பற்றி நினைவுகொள்ள நேரம் இருந்தால், சமூக அக்கறைகொண்ட பலரில் ஒருவனாக, தனிப் பெயர் இல்லாத கூட்டமாக நினைத்தால்கூடப் போதுமானது!''

பி.மாணிக்கவாசகம், கும்பகோணம்.
 ''ஓட்டு போட விருப்பமா... வாங்க விருப்பமா?'' 

 ''எதுவுமே வாங்காமல் ஓட்டுப் போடவே எப்போதும் விருப்பம்!''

ச.வினோத், சென்னை84
 ''நண்பர்கள்போல நட்புடன் ஓர் இயக்குநரிடம் சினிமாவைக் கற்றுக்கொள்ள முடியாதா? உதவி இயக்குநர்கள் அடிமைகளைப்போல நடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறதே?'' 

 ''அடிமைகளாக யாரும் இருக்கக் கூடாது. சினிமா கற்றுக்கொள்ள பள்ளிகள் இருக்கின்றன. டாக்டரிடம் கம்பவுண்டராக இருந்து, நட்புடன் மருத்துவம் கற்பது அபாயம். உங்களுக்கும் நோயாளிக்கும்!''


சா.கணேஷ், வேலூர்.
 ''பெரியார், காந்தி... உங்களுக்கு நெருக்க மானவர் யார்?'' 

 ''குஜராத்... கொஞ்சம் தூரம். ஈரோடு... பக்கம். தவிர, என் மொழியில் பேசுபவர் பெரியார். நான் பெரியாருடன் காந்திக்கு மிக நெருங்கியவன்!''

கே.வெங்கடேசன், தோட்டப்பாளையம்.
 ''சந்தர்ப்பம் கிடைக்காதவரைதான் எல்லோரும் நல்லவர்கள் என்கிற வாதத்தில் நீங்கள் நியாயம் காண் கிறீர்களா?'' 

 ''அது எல்லோருக்கும் பொருந்தாது. சந்தர்ப்பத்தை மறுத்தவர்கள் பலர் உண்டு... நான் உள்பட!''


அ.யாழினி பர்வதம், சென்னை-78.
 ''உண்மையைச் சொல்லுங்கள்... கம'ல’ஹாசன் - கம'ல்’ஹாசன் ஆனது நியூமராலஜியினால்தானே?'' 

 ''இல்லை. சரியான உச்சரிப்பு அதுதான் என்று வடமொழி வல்லுநர் சொல்ல... செய்யப்பெற்ற மாற்றம்!''

பொன்.சீனிவாசன், வெண்ணந்தூர்.
 '' 'தேவர் மகன்’ஆக நடித்த நீங்கள், 'அருந்ததியர் மகன்’ஆக 'ஆதி திராவிடர் மகன்’ஆக நடிக்காதது ஏன்?'' 

 ''ஒரே படத்தில் பலரின் பிள்ளையாக 'தசாவதாரம்’ படத்தில் நடித்தேன். வின்சென்ட் பூவராகனைத் தன் மடியில் தூக்கிவைத்துக்கொண்டு அழும் அந்தத் தாய்மை எனக்குள்ளும் உண்டு. நான் உலகத்தின் பிள்ளை. யார் மகனாகவும் நடிப்பேன், இனியும்!''

ஞான.தாவீதுராஜா, பழவேற்காடு.
 ''உங்கள் மகள்களைப் பள்ளியில் சேர்க்கும்போது - சாதியைச் சொல்லிச் சேர்க்கவில்லையாமே நீங்கள்... உண்மையா?'' 

 ''உண்மைதான். பள்ளி சேர்க்கையில் மட்டுமல்ல... பிறப்புச் சான்றிதழ் நிரப்பும்போதும், சாதி - மதம் என்ற இடங்களில் -NIL-என்று எழுதிவைத்தேன். இன்னும் நின்றபாடில்லை!''

ப.தங்கமணி, சூசைபாளையம்.
 ''சுபாஷ் சந்திரபோஸ் - பிரபாகரன் ஒப்பிடுக?'' 

 ''தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!
வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு காரணங்கள்! ''

வி.பவானி, திருவாரூர்.
 '' 'அன்பே சிவம்’ எனும் ஒரு கோல்டன் சினிமா கொடுத்த தங்களின் அன்பு ஏன் பொய்த்தது, நெருங்கிய உறவுகளுடன்?'' 

 ''பொய்த்தது அன்பல்ல, மனிதர்களே!''

கிருத்திகா அரசு, தஞ்சாவூர்.
 ''மாஸ் ஹீரோ என்பதற்கு விளக்கம் என்ன? நீங்கள் நடித்த படங்களில் எதை மாஸ் ஹீரோ படம் என்று சொல்வீர்கள்?'' 

 ''மக்கள் நாயகன் எனவும்கொள்ளலாம். நிறைய டிக்கெட்டுகள் வசூல் என்றுதான் வர்த்தகம் பொழிப்புரை சொல்கிறது. அப்படிப் பார்த்தால், 'சகலகலா வல்லவன்’, 'அபூர்வ சகோதரர்கள்’, 'தேவர் மகன்’, 'அவ்வை சண்முகி’, 'இந்தியன்’, 'தசாவதாரம்’ இவை எல்லாம் அந்தந்தக் காலகட்டத்தின் மாஸ் ஹீரோக்கள். அடுத்து வரும் சிறந்த கலெக்ஷன் ஆளை மாற்றிச் சொல்லும்!''


ஆர்.சுஜாதா, சென்னை.
  ''வலைப்பதிவுகளில் உங்கள் மீதான விமர்சனம் அதிகமாக இருக்கிறதே! 'கமல் தனது படங்களுக்கான கருவை வெளிநாட்டுப் படங்களில் இருந்து எடுத்துக்கொள்கிறார்’ என்றெல்லாம் விமர்சனக் கண்டனங்கள். எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது. உங்கள் படங்கள் பிடிக்கும் அவ்வளவுதான்! ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் என் நண்பர்களிடம் நான் வாதாடுவதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' 

''நான் எழுதிய படங்களில் அந்தக் குற்றச்சாட்டு பொருந்தாது. மற்றபடி கோடம்பாக்கத்துக்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை மணந்தால் பறித்துச் சூடிக்கொள்வது பழக்கம்!''

சா.பிரேமா, செங்கல்பட்டு.
 ''தாயின் அன்பு - மனைவியின் அன்பு... எது பெரிது?'' 

 ''ஒன்று, Unconditional. மற்றொன்று, Conditional. ஆனால், சில சமயம் தாயுள்ளம் கொண்ட மனைவியரும் அமையப் பெற்றவர் உண்டு!''


க.ராஜன், தஞ்சாவூர்.
''உங்களுக்குப் பிடித்த டி.வி நிகழ்ச்சி?'' 

''செய்திகள், National geographic, Discovery channel, பழைய படங்கள். மற்றவற்றை எல்லோரையும்போல் பரிவுடன் பொறுத்துக்கொள்கிறேன்!''

ஆ.சசிக்குமார்,  உடுமலைப்பேட்டை.
 ''பாரதியின் கவிதைகளில் உங்களுக்குப் பிடித்தது எது... ஏன்?''

'' 'தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்  உண்டோ?’ எனக் கேட்டு வீரத்துக்கு வயது இல்லை என்ற நம்பிக்கையைச் சிந்திப்பவர்க்கு ஊட்டிடும் வரிகள்!''

ராஜலக்ஷ்மி பாலாஜி, சென்னை-33.
''ஒரு கமல் ரசிகனுக்கு நீங்கள் தரும் அதிகபட்ச மரியாதையாக எதைக் கருதுகிறீர்கள்?'' 

''அவர் ரசனையுடன் அவரையும் உயர்த்தும் கலையை அவருக்கு ஊட்டும் தாய்மையையே!''

5 comments:

  1. EPPA UNGA INTERVIEW PATHALUM ETHAVATHU PUTHUSA KATHUKUREN.. HATS OFF THALAIVA

    SINCERE THANKS TO SANDIYAR ANNA.

    ReplyDelete
  2. Great one giving respect to Bharathiyar, Periyar, Bose, Prabhakaran and Mom.

    ReplyDelete
  3. Excellent interview.. Thanks for sharing Sagaa

    ReplyDelete